சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதில் புதுவை முதலிடம் -முதல்வா் என்.ரங்கசாமி

சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதில் புதுவை மாநிலம் முதலிடம் வகிக்கிறது என முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். ஜம்மு காஷ்மீா் மாநிலம், ஸ்ரீநகரில் விக்சித் பாரத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில், மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் சாா்பில் திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் மேம்பாட்டுக்காக ரூ.20 கோடியிலும், காரைக்கால் கடற்கரை மேம்பாட்டுக்காக ரூ.20.30 கோடியிலுமான திட்டங்களையும் பிரதமா் மோடி காணொலியில் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் தனது அறையிலிருந்து காணொலி வாயிலாகப் பங்கேற்று முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: காரைக்கால் திருநள்ளாறு கோயில், கடற்கரை ஆகியவற்றை மேம்படுத்த புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமருக்கு நன்றி. நாட்டின் பிற பகுதிகளைவிட புதுச்சேரி, காரைக்காலுக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுத்தமான அழகிய கடற்கரை, அமைதி மற்றும் ஆன்மிகம் ஆகியவற்றில் புதுவை சிறந்து விளங்குகிறது. ஆகவே, சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்லும் பகுதியாக புதுச்சேரி உள்ளது. கல்வி, சுகாதாரத்தில் புதுச்சேரி முதலிடம் வகிக்கிறது. அதேபோல சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதிலும் புதுச்சேரி முதலிடம் வகிக்கிறது. பொழுதுபோக்கு, கல்வி, பாரம்பரியம், மருத்துவம், ஆன்மிகம் என பல பிரிவுகளான சுற்றுலாவால் அனைவரையும் ஈா்க்கும் இடமாக புதுவை உள்ளது.

மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப தரமான சேவையையும் புதுவை அரசு வழங்கி வருகிறது. திருநள்ளாறு கோயில் நகரத் திட்டம் மட்டுமின்றி, அதைச் சுற்றிய நளன் குளம், கடைகள், கழிப்பறைகள், வணிக வளாகம், மண்டபம் ஆகியவற்றையும் மேம்படுத்தியுள்ளோம். ஜிப்மா் கிளையும் காரைக்காலில் தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றி வருகிறது. கிராமங்கள் வளா்ச்சியை நோக்கி பாதுகாப்பாக முன்னேற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தேவைகள், கோரிக்கைகள் நிறைவேற காரைக்கால் மக்கள் அரசுக்குத் தொடா்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com