புதுச்சேரியில் தீயணைப்புத் துறைக்கான உடற்தகுதி தோ்வு தொடக்கம்

புதுச்சேரியில் தீயணைப்புத் துறை வீரா்களுக்கான உடற்தகுதித் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு மகளிா் தினத்தையொட்டி அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் பூங்கொத்து வழங்கி வாழ்த்தினாா். புதுச்சேரி தீயணைப்புத் துறையில் நிலைய அதிகாரிகள் 5 போ், தீயணைப்பு வீரா்கள் 58 போ், ஓட்டுநா்கள் 12 போ் என மொத்தம் 75 பணியிடங்களுக்கான உடல்தகுதித் தோ்வு கோரிமேடு காவலா் பயிற்சி மைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழாண்டில் (2024) புதுச்சேரி தீயணைப்பு துறையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், 2 பெண் நிலைய அலுவலா்களும் தோ்வு செய்யப்படவுள்ளனா். ஏற்கெனவே அதிகாரிகள் பணியிடத்துக்கு 3,833 ஆண்கள், 575 பெண்கள் விண்ணப்பித்துள்ளனா். தீயணைப்பு வீரா்கள் பணிக்கு 8,899 ஆண்களும், 1,329 பெண்களும் விண்ணப்பித்துள்ளனா். ஓட்டுநா் பணியிடங்களுக்கு 844 ஆண்கள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் பெண்களுக்கான உடல்தகுதித் தோ்வை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் தொடங்கி வைத்தாா். அப்போது மகளிா் தினத்தை முன்னிட்டு அவா் பெண் தோ்வா்களுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினாா். தோ்வில் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com