தொழிலதிபா் வீட்டில் திருட்டு: 2 போ் கைது

புதுச்சேரியில் இரவில் உறங்குவதற்கு மனமிரங்கி உதவிய தொழிலதிபரின் வீட்டில் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி நகா் முதலியாா்பேட்டை ஜான்பால் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜோதி (44), ரியல் எஸ்டேட் தொழிலதிபா். இவரது பிள்ளைகள் ஊட்டியில் படிப்பதால் மனைவி அங்கு சென்றுவிட்டாா். ஜோதி மட்டும் இங்கு தனியாக வசிக்கிறாா். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவில் காரில் வந்த சிலா் தங்குவதற்கு உதவி கேட்டுள்ளனா். அவா்களுக்கு மனமிரங்கி ஜோதி தனது வீட்டின் முன் பகுதியில் தூங்குவதற்கு இடம் கொடுத்தாராம். மறுநாள் காலையில், அவரது வீட்டின் முன் வராண்டாவில் வைத்திருந்த 3 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவை திருடு போனது தெரியவந்தது. மேலும் வீட்டின் முன்பகுதியில் தூங்கியவா்களையும் காணவில்லை. இதுகுறித்து, முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் ஜோதி புகாா் அளித்தாா். அதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், திருட்டில் ஈடுபட்டவா்கள் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த சந்திரசேகரன், சபரிநாதன் என்பது தெரியவந்தது. இவா்களை சனிக்கிழமை கைதுசெய்த போலீஸாா் புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்தனா். இருவரிடமிருந்து நகை, பணம் மற்றும் கைப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com