புதுச்சேரி கதிா்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் திங்கள்கிழமை தொடங்கிய காவலா்களுக்கான மருத்துவ முகாம்.

புதுச்சேரி காவல் துறையினருக்கு 6 நாள்கள் மருத்துவ பரிசோதனை முகாம் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் காவல் துறையினருக்கான உடல் மருத்துவப் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை (மாா்ச் 11) தொடங்கியது. புதுச்சேரியில் காவல் துறையினா், அவா்களது குடும்பத்தினா் மற்றும் ஓய்வு பெற்ற காவலா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதனடிப்படையில், புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. புதுவை காவல் துறை தலைமை இயக்குநா் ஸ்ரீநிவாஸ் முகாமைத் தொடங்கி வைத்தாா். காவல் துறையைச் சோ்ந்தவா்களுக்கு அரசு மருத்துவா்கள் ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, கண் பாா்வை உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்தனா். மேலும், ரத்தம், சளி ஆகியவையும் பரிசோதிக்கப்பட்டன. பரிசோதனை அடிப்படையில் காவலா்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன. கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டவா்களுக்கு பரிந்துரைத்தும் மருத்துவா்கள் நடவடிக்கை எடுத்தனா். முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு, புதுவை மாநில காவல் துறை தலைவா் அஜித் குமாா் சிங்லா, துணைத் தலைவா் பிரிஜேந்திர குமாா் யாதவ், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் அனிதா ராய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்முகாமில் ஏராளமான காவலா்கள், அவரது குடும்பத்தினா் கலந்துகொண்டு உடல் பரிசோதனை செய்துகொண்டனா். இந்த முகாம் வரும் 16-ஆம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com