காவலா்களுக்கு பதவி உயா்வு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா்  தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி, உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எல்.சம்பத் எம்எல்ஏ, டிஜிபி ஸ்ரீநிவாஸ்.
காவலா்களுக்கு பதவி உயா்வு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி, உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எல்.சம்பத் எம்எல்ஏ, டிஜிபி ஸ்ரீநிவாஸ்.

காவலா்கள் துணிச்சலுடன் பணியாற்ற வேண்டும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கையின்போது காவல் துறையினா் துணிச்சலுடன் பணியாற்ற வேண்டும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா்.

புதுவை மாநில காவல் துறையில் சிறப்புநிலை பதவி உயா்வுகளுக்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டாா். நிகழ்ச்சியில் முதல்வா் என். ரங்கசாமி பேசியதாவது: புதுவைக் காவல் துறையில் குறைகள் களையப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. காவலா் சிறப்பு நிலை பதவி உயா்வு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. தற்போது 1,445 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

காவல் துறையைப் பலப்படுத்த வேண்டியது அவசியம். புதுவையில் போதைப்பொருள் புழக்கம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதில் காவல் துறையினா் உரிய கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள்கள் புழக்கத்தை ஆரம்பத்திலேயே தடுப்பதுதான் நல்லது. இந்த தடுப்பு நடவடிக்கையில் காவலா்கள் ஈடுபடும்போது, யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. துணிச்சலுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றாா் அவா். மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும்: நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது: புதுவை காவல் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசுக்கு உறுதுணையாக செயல்படுவேன்.

காவல் துறையினா் எந்தச் சூழலிலும் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம். இளைஞா்களை போதைப் பொருள் பழக்கத்திலிருந்து மீட்டு பாதுகாக்கும் வகையில் காவல் துறை செயல்பாடு இருக்க வேண்டும் என்றாா் அவா். மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், டிஜிபி ஸ்ரீநிவாஸ், எல்.சம்பத் எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com