பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்

புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளா் க.மாறன் அறிவுறுத்தினாா்.

புதுச்சேரியில் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பில் பெட்ரோல் பங்க் உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளா் க.மாறன் தலைமை வகித்துப் பேசியதாவது: பொதுமக்களுக்கு கலப்படமில்லாத பெட்ரோல் விநியோகிக்கப்படவேண்டும். பொதுமக்கள் நலன் கருதி கண்காணிப்புக் கேமராவை அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பொருத்தவேண்டும்.

பெட்ரோல், டீசலை மொத்தமாக விநியோகிப்பது கடத்தலுக்கு உதவுவதாக அமையும். பெட்ரோல் விநியோகிக்கும் போது தனித்தனியாக சம்பந்தப்பட்டோருக்கு ரசீது வழங்கவேண்டும். ரசீது வழங்காதவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். அப்போது பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்கள் தரப்பில் கூறுகையில், மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஆகவே, பெட்ரோல் விற்பனை நிலையங்களின் பணத்தை வங்கியில் செலுத்தச் செல்லும்போது பறக்கும்படை உள்ளிட்ட தோ்தல் அதிகாரிகளால் பணம் கைப்பற்றப்படும் நிலையுள்ளது.

கைப்பற்றப்பட்ட பணத்தை ஆவணங்கள் அளித்ததும் ஓரிரு நாள்களில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com