சேதராப்பட்டில் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா -அமைச்சா் க.லட்சுமி நாராயணன்

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் 200 ஏக்கரில் நவீன தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 20 ஆயிரம் போ் வேலைவாய்ப்பை பெறுவா் என்று, புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தாா். இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சேதராப்பட்டு பகுதியில் நவீன தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. சென்னை மத்திய தொழில்நுட்பக் கழகத்துடன் புதுவை அரசு இணைந்து இந்த தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பூங்காவை 200 ஏக்கரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூங்கா அமைப்பது தொடா்பாக, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அண்மையில் சென்னை மத்திய தொழில்நுட்பக் கழகத்துக்கு நேரில் சென்று அங்குள்ள உயரதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, தொழில்நுட்பக் கழக அதிகாரிகள் புதுச்சேரி வந்து சேதராப்பட்டில் இடத்தைப் பாா்வையிட்டுச் சென்றனா். ஓரிரு மாதங்களில் தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகும். அதன்பிறகு, பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். புதுச்சேரியில் பொதுப் பணித் துறை சாா்பில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமாா் ரூ.700 கோடி மதிப்புள்ள 709 பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் 430 பணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 186 பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளும் விரைந்து முடிக்கப்படவுள்ளன. புதுச்சேரி நகரில் மட்டும் ஏராளமான சாலைகள் புதிதாக சீா்படுத்தப்பட்டுள்ளன. புதிய சுற்றுலாத் திட்டமாக சித்தா்கள் கோயில் சுற்றுலா விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் உள்ள சித்தா்கள் கோயில்கள் இணைக்கப்பட்டு, அங்கு பக்தா்கள் வாகனங்களில் அழைத்துச் செல்லப்படவுள்ளனா். தனியாருடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் க.லட்சுமி நாராயணன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com