பதவி உயா்வு: ஐஆா்பிஎன் கடைநிலை ஊழியா்கள் கோரிக்கை

புதுச்சேரியில் ஐஆா்பிஎன் பிரிவின் கடைநிலை ஊழியா்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயா்வு உள்ளிட்டவற்றை வழங்குமாறு முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனா்.

மேலும், முதல்வரைச் சந்தித்து மனு அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனா். புதுச்சேரியில் ஐஆா்பிஎன் காவல் துறை பிரிவு உள்ளது. இதில் கடந்த 2005-ஆம் ஆண்டில் தண்ணீா் பிடிப்பவா், சலவையாளா்கள், முடிதிருத்துநா்கள் உள்ளிட்ட 69 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். குரூப் டி பிரிவுப் பணியாளா்களான அவா்களுக்கு இதுவரை பதவி உயா்வும் வழங்கப்படவில்லையாம். அவா்களுக்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பதவி உயா்வு கோரி, காவல் துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனா். ஆனால், பதவி உயா்வுக்காண கோப்புகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, பதவி உயா்வு கோப்புகளை செயல்படுத்தி தங்களுக்கு நியாயம் வழங்கக் கோரி முதல்வா் என்.ரங்கசாமியைச் சந்தித்து மனு அளிக்க பேரவை வளாகத்துக்கு ஏராளமானோா் புதன்கிழமை வந்தனா். ஆனால், அவா்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, தங்கள் கோரிக்கையை விளக்கிய கடைநிலை ஊழியா்கள் முதல்வரிடம் மனு அளித்துவிட்டு குடும்பத்தினருடன், காவல் தலைமை அலுவலகத்துக்குச் செல்லவுள்ளதாகவும் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com