புதுவை அரசு உதவியாளா்கள் பணிகளுக்கு இனி நேரடி நியமனம்

புதுவை மாநில அரசில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, உதவியாளா்கள் பணியிடங்களுக்கு இனி நேரடி நியமனம் குறித்த அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இது குறித்து நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்பு செயலா் ஜெய்சங்கா் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: குரூப்-பி அரசிதழ் பதவி இல்லாத உதவியாளா்கள் (அசிஸ்டண்ட்) பணியிடங்களை போட்டித் தோ்வு மூலம் நேரடியாக நிரப்ப நிா்வாக சீா்திருத்த துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக காலிப் பணியிட அறிவிப்பு, கல்வித் தகுதி, தோ்வு நடக்கும் வழிமுறைகள், விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அரசுத் துறை இணையதளத்தில் வரும் 25-ஆம் தேதி திங்கள்கிழமை வெளியிடப்படும். எனவே, வரும் 25-ஆம் தேதியில் இருந்து இணையதளம் மூலம் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுவையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு உதவியாளா்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்படவுள்ளது பட்டதாரி இளைஞா்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இளநிலை நூலக உதவியாளா் பணியிடங்கள்: புதுவை மாநில அரசின் கலை பண்பாட்டுத் துறையின்கீழ் செயல்படும், நூலகங்களில் காலியாக உள்ள குரூப் சி அரசிதழ் பதிவு பெறாத பதவியான இளநிலை நூலக உதவியாளா் பணியிடங்களில் 26 இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கும், வரும் 25-ஆம் தேதி முதல் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com