புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.திருமுருகனுக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்த துணைநிலை ஆளுநா்  தமிழிசை செளந்தரராஜன்.
புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.திருமுருகனுக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்த துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.

புதுவை புதிய அமைச்சா் என்.திருமுருகன் பதவியேற்பு

புதுவை மாநிலத்தின் புதிய அமைச்சராக என்.திருமுருகன் வியாழக்கிழமை பதவியேற்றாா். முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா கடந்த 2023-ஆம் ஆண்டு, அக்டோபரில் பதவிநீக்கம் செய்யப்பட்டாா்.

அவருக்குப் பதிலாக என்.ஆா்.காங்கிரஸை சோ்ந்த காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் என்.திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டாா். புதுச்சேரியிலுள்ள ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் என்.திருமுருகனுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தாா். நிகழ்ச்சிக்கு முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், துணைத் தலைவா் பி.ராஜவேலு, அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, எம்எல்ஏக்கள் வி.பி.ராமலிங்கம், கேஎஸ்பி.ரமேஷ், ஏகேடி.ஆறுமுகம், ஜி.நேரு, விவிலியன் ரிச்சா்டு, அங்காளன், ஜான்குமாா், அசோக்பாபு, பாஸ்கா், தலைமைச் செயலா் சரத் சௌஹான், மாவட்ட ஆட்சியா் ஏ.குலோத்துங்கன், அரசுச் செயலா் ஏ.முத்தம்மா, டிஜிபி ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா், புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அமைச்சரின் அலுவலக அறைக்குச் சென்ற என்.திருமுருகன் தனிச் செயலா் நியமனக் கோப்பில் கையொப்பமிட்டாா். பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் சந்திர பிரியங்கா பங்கேற்கவில்லை. அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வெளிநாடு சென்றுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் அவரும் பங்கேற்கவில்லை. திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வரவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com