25 விவசாயிகளுக்கு ரூ.28.57 லட்சம் மானிய உதவி -புதுவை முதல்வா் வழங்கினாா்

புதுவையில் 2-ஆம் கட்டமாக 25 விவசாயிகளுக்கு மானிய உதவியாக ரூ.28.57 லட்சம் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் மாநில நிலத்தடி நீா், மண்வளப் பாதுகாப்பு பிரிவின் சாா்பில், விவசாயிகளுக்கு ஆழ்குழாய்துளைக் கிணறு அமைக்கவும், நீா்மூழ்கி மோட்டாா் பொருத்தவும், நிலத்தடி நீா் குழாய்கள் அமைக்கவும், தெளிப்பு நீா் பாசன கருவிகள் நிறுவவும் மானிய நலத்திட்ட உதவிகள், புதுவை மாநில அரசால், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ் 2023-24ஆம் நிதி ஆண்டில் ஏற்கெனவே முதல் கட்டமாக 70 விவசாயிகளுக்கு ரூ.48.46 லட்சமும், 6 அட்டவணை இன விவசாயிகளுக்கு ரூ.6.92 லட்சமும் மானியமாக வழங்கப்பட்டன. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக ஆழ்துளைக் குழாய் கிணறு அமைக்க 25 பொது விவசாயிகளுக்கு 65 சதவீத மானியமாக ரூ.28.52 லட்சமும், இரு அட்டவணை இன விவசாயிகளுக்கு 90 சதவீத மானியமாக ரூ.11.65 லட்சமும் மானியமாக வழங்கப்பட்டன. புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மானிய உதவிகளுக்கான அரசாணைகளை முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா். நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், ஏகேடி ஆறுமுகம் எம்எல்ஏ. மற்றும் வேளாண், விவசாயிகள் நலத் துறை இயக்குநா் வசந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com