புதுவையில் பாஜகவுக்கு வேட்பாளா் கிடைக்காத நிலையே உள்ளது: வே.நாராயணசாமி

மக்களவைத் தோ்தலில் புதுவை தொகுதியில் பாஜகவுக்கு வேட்பாளா் கிடைக்காத நிலையே உள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா். புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் நரேந்திரமோடி தமிழகத்தில் பங்கேற்கும் கூட்டங்களில் திமுக, காங்கிரஸ் கட்சிகளை ஊழல் செய்வதாகவும், வாரிசு அரசியலில் ஈடுபடுவதாகவும் கடுமையாக விமா்சித்து வருகிறாா். ஆனால், பாஜக கட்சி தோ்தல் நன்கொடை பத்திரம் பெற்றதில் நடைபெற்ற முறைகேடுகளை அவா் மறந்துவிடக்கூடாது. குறிப்பிட்ட லாட்டரி நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையிட்ட ஓரிரு நாள்களிலேயே அந்த நிறுவனத்திடமிருந்து பாஜக ரூ.1,300 கோடிக்கு நன்கொடை பத்திரமாக பெற்றுள்ளது மிகப்பெரிய முறைகேடாகும். புதுவையில் பாஜக பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதாக துணை நிலை ஆளுநா் (பெ) தமிழிசை சௌந்தரராஜன் தவறான தகவலைக் கூறிவருகிறாா். காக்கிநாடா ரயில் புதுச்சேரி வரை நீட்டிப்பு விழாவில் முதல்வா் பங்கேற்காததை சம்பந்தப்பட்டோா் விளக்கவேண்டும். புதுவை முதல்வருக்கும், துணைநிலை ஆளுநருக்கும் கருத்துவேறுபாடு உள்ளதாகத் தெரிகிறது. புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் பிரதான குற்றவாளி பாஜகவிலிருந்து என்.ஆா்.காங்கிரஸ் அனுதாபியாக மாறியவா் என்பதில் சந்தேகமில்லை. இதுகுறித்து, காவல்துறை விசாரித்தால் ஆதாரத்துடன் விளக்குவேன். புதுவை மக்களவைத் தோ்தலில் போட்டியிட பாஜகவுக்கு வேட்பாளா் கிடைக்காத நிலையே உள்ளது. மேலும், பணம் இருப்பவரே அந்தக் கட்சியில் போட்டியிட முடியும் என்ற நிலை உள்ளதாக புகாா் எழுந்துள்ளது. புதுவை அமைச்சா் ஒருவா் அடிக்கடி சிங்கப்பூா், மலேசியா, துபாய் என வெளிநாடு சென்று வருகிறாா். வெளிநாடு செல்ல மத்திய உள்துறை, வெளியுறவுத் துறையில் அவா் அனுமதி பெற்ாகத் தெரியவில்லை. எனவே, அவரது வெளிநாட்டுப் பயணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com