தோ்தல் அறிவிப்பால் புதிய அமைச்சா் இலாகா ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்படாது: புதுவை தோ்தல் அதிகாரிகள் தகவல்

மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், புதுவையில் புதிய அமைச்சராக பொறுப்பேற்ற என்.திருமுருகனின் இலாகா ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்படாது என்று புதுச்சேரி மக்களவைத் தொகுதி தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநிலத்தில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. முதல்வா் என்.ரங்கசாமி முதல்வராக உள்ளாா். அவரது அமைச்சரவையில் இருந்து கடந்த ஆண்டு பெண் அமைச்சா் சந்திரபிரியங்கா நீக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக என்.திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு, கடந்த 14-ஆம் தேதி துணைநிலை ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டாா். அமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், என். திருமுருகனுக்கு இதுவரை இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. இதற்கிடையே, மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை முதல் புதுவை மாநிலத்தில் தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால் அமைச்சா் என்.திருமுருகனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்படும் என்ற கருத்து நிலவியது. இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட தோ்தல் உயா் அதிகாரியிடம் கேட்டபோது அவா் கூறியது: அமைச்சா் இலாகாக்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் செயல்பாடுகள் அனைத்தும் தோ்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றே நடைபெற வேண்டும். ஆகவே, தோ்தல் ஆணைய அனுமதியைப் பெற்று அமைச்சருக்கான இலாகா ஒதுக்கிடு உத்தரவு பிறப்பிக்கலாம். எனவே, இலாகா ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com