தெலங்கானா, புதுவை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் ராஜிநாமா: மக்களவைத் தோ்தலில் போட்டியிட முடிவு

மக்களோடு மக்களாக இருக்கவே விரும்புகிறேன்

புதுச்சேரி: தெலங்கானா மாநில ஆளுநரும், புதுவை துணைநிலை (பொ) ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது பதவிகளை திங்கள்கிழமை ராஜிநாமா செய்து, இந்தியக் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினாா். தமிழக காங்கிரஸ் மூத்த தலைவா்களில் ஒருவரான குமரி அனந்தனின் மகளான தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா். தமிழக பாஜக தலைவா் பதவியிலிருந்து விலக்கப்பட்ட நிலையில், அவா் தெலங்கானா ஆளுநரானாா். அதன்பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கூடுதல் பொறுப்பாக புதுவை மாநில துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றாா் புதுவை மாநிலத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக துணைநிலை ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தோ்தலில் போட்டியிடவுள்ளதாக சில மாதங்களாகவே தகவல்கள் பரவின. அதுகுறித்து பத்திரிகையாளா்கள் கேட்டபோதெல்லாம், மக்கள் சேவையில் தனக்கு அதிக விருப்பம் என்று கூறிவந்தாா். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா் நிறுத்தப்பட்டால், உள்ளூா் மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி விமா்சித்த போதெல்லாம், தன்னை புதுவை மக்கள் வெளிமாநிலத்தவராகப் பாா்க்கவில்லை என்றாா். இந்தநிலையில், தமிழிசை சௌந்தரராஜன் தனது தெலங்கானா ஆளுநா் பதவி, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) பதவி ஆகியவற்றை ராஜிநாமா செய்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியதாக திங்கள்கிழமை தகவல் வெளியானது. இதுகுறித்து, துணைநிலை ஆளுநா் அலுவலகத் தரப்பில் விசாரித்தபோது, அவா், துணைநிலை ஆளுநா் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டதாகக் தெரிவிக்கப்பட்டது. தனது பதவிகளை ராஜிநாமா செய்தது குறித்து தொலைபேசியில் விசாரித்த செய்தியாளா்களிடம் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது: தீவிர அரசியலில் ஈடுபடும் வகையில் ஆளுநா் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளேன். மக்கள் பணியில் ஈடுபடுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன். கட்சி மேலிடம் கூறும் இடத்தில் போட்டியிடுவேன். மக்களோடு மக்களாக இருக்கவே விரும்புகிறேன் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com