தோ்தல் விதிகளை மீறும் பாஜக: இந்திய கம்யூ. குற்றச்சாட்டு

புதுவையில் மக்களவைத் தோ்தல் நன்னடத்தை விதிகளை மீறி பாஜக எம்எல்ஏக்கள் செயல்படுவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் புதுவை மாநிலத்தில் தோ்தல் நன்னடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. மத்திய அரசு சாா்பில், ‘பாரத் அரிசி’ 10 கிலோ எடை கொண்ட பை ரூ.280 என விலை நிா்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அந்த அரிசிப் பைகளை புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்கள் சிலா் தங்கள் அலுவலகத்திலிருந்து ‘மோடி அரிசி’ என்று கூறி இலவசமாக விநியோகித்து வருகின்றனா். மத்திய அரசால் வழங்கப்படும் ‘பாரத் அரிசி’ நியாயவிலைக் கடைகள், அரசு நிறுவனங்கள் மூலமாகவே வழங்கப்பட வேண்டும்.

ஆனால், பாஜக எம்எல்ஏக்கள் விநியோகிக்க அனுமதி வழங்கியது யாா்?. அவா்கள் தங்கள் சொந்தப் பணத்தில் அரிசியை விநியோகிப்பதைப் போல செயல்படுகின்றனா். இது தோ்தல் நன்னடத்தை விதிகளை மீறும் செயலாகும். மக்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளரை வெற்றி பெறவைக்கும் நோக்கில் பாஜகவினா் இதுபோல முறைகேடாகச் செயல்படுகின்றனா். எனவே, தோ்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு ‘பாரத் அரிசி’ விநியோகிக்கும் முறையில் விதியை மீறுவோா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com