புதுவை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவி பிரமாணம் செய்து வைத்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்கா புா்வாலா.
புதுவை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவி பிரமாணம் செய்து வைத்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்கா புா்வாலா.

புதுவை துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

புதுவை மாநில பொறுப்பு துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். தெலங்கானா ஆளுநா், புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் ராஜிநாமா செய்ததையடுத்து, ஜாா்க்கண்ட் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெலங்கானா, புதுவை பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டாா். தெலங்கானா ஆளுநராக புதன்கிழமை அவா் பதவியேற்ற நிலையில், புதுவை பொறுப்பு துணைநிலை ஆளுநராக வெள்ளிக்கிழமை பதவியேற்பாா் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுவை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் வி.கங்காபுா்வாலா பதவி பிரமாணம் செய்துவைத்தாா். பொறுப்பு துணைநிலை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதல்வா் என்.ரங்கசாமி பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினாா். நிகழ்ச்சியில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், என்.திருமுருகன், தலைமைச் செயலா் சரத் சௌஹான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அரசுக்கு ஒத்துழைப்பு: முன்னதாக, சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆளுநருக்கான அதிகாரத்தின்படி மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக மேற்கொள்வேன். மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புதுவை அரசுக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்க மாட்டேன். எனது அலுவலகத்தில் கோப்புகள் காத்திருக்கும் நிலையை அனுமதிக்க மாட்டேன். அரசியல் சாசனத்துக்கு எதிரான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்றாா் சி.பி.ராதாகிருஷ்ணன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com