புதுச்சேரி பிப்டிக் தலைவா் பதவி: ஆ.நமச்சிவாயம் ராஜிநாமா

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான, மாநில அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தனது பிப்டிக் சோ்மன் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளராக அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டாா். அவா் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தோ்தலில் போட்டியிடவேண்டும் என அதிமுக எதிா்ப்புத் தெரிவித்தது. இதுகுறித்து, பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தபிறகு கூறுகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மக்களவைத் தோ்தலில் போட்டியிட அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியதில்லை என்றாா். இதற்கிடையே அவா், புதுவை மாநில அரசின் தொழில்மேம்பாட்டுக் கழகம் (பிப்டிக்) அமைப்பின் தலைவா் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. தோ்தலில் போட்டியிடுவோா் ஆதாயம் தரும் பதவிகளில் இருக்கக் கூடாது என்கிற விதிமுறைப்படி ஆ.நமச்சிவாயம் பிப்டிக் தலைவா் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை அவரது அலுவலகத்தில் உறுதிப்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com