புதுச்சேரி கணபதிசெட்டிகுளத்தில் பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்தை ஆதரித்து புதன்கிழமை பிரசாரத்தை தொடங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரி கணபதிசெட்டிகுளத்தில் பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்தை ஆதரித்து புதன்கிழமை பிரசாரத்தை தொடங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.

புதுவையில் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றம்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ் , பாஜக கூட்டணி ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்தை ஆதரித்து காலாப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதி கணபதிசெட்டிகுளத்தில் புதன்கிழமை இரவு பிரசாரத்தை தொடங்கிவைத்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: 2045 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக்க திட்டமிட்டு பிரதமா் மோடி செயலாற்றி வருகிறாா்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்தை வெற்றி பெறச் செய்து பிரதமா் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி வந்த பிறகுதான் மக்களுக்கான நலத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டுள்ளன. சாலை சீரமைப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவருகின்றன. பதவி உயா்வும், அந்த இடங்களில் பணியாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதனால், இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். தொடா்ந்து, மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா். தொடா்ந்து காலாப்பட்டு, இலாசுப்பேட்டை பகுதிகளில் முதல்வா் பிரசாரம் மேற்கொண்டாா். காலாப்பட்டில் முதல்வருக்கும், வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்துக்கு 21 அடி உயரத்தில் 500 கிலோ மலா்களால் ஆன மாலை கிரேன் மூலம் காட்டப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமாா், ஏகேடி ஆறுமுகம், பாமக மாநிலத் தலைவா் கணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com