புதுச்சேரி என் ஆா் காங்கிரஸ் கட்சி சாா்பில் கதிா்காமம் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயம் அறிமுக கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரி என் ஆா் காங்கிரஸ் கட்சி சாா்பில் கதிா்காமம் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயம் அறிமுக கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் என்.ரங்கசாமி.

திட்டங்களைச் செயல்படுத்தும் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவளியுங்கள்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவளிப்பதை வெளிப்படுத்தும் வகையில் மக்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என முதல்வா் என்.ரங்கசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்தை ஆதரித்து மங்களம் தொகுதிக்கு உள்பட்ட திருக்காஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது: புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே மத்திய அரசு உதவியுடன் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தத் திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தவும், புதிய திட்டங்களைத் தொடங்கவும் பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்துக்கு வாக்களிக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் குடும்பத் தலைவியருக்கு மாதாந்திர நிதியுதவி, குழந்தைகளுக்கான வைப்புத் தொகைத் திட்டம், எரிவாயு உருளை மானியம், மாணவா்களுக்கான இலவச மிதிவண்டி உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திட்டங்களை செயல்படுத்திய அரசுக்கு ஆதரவளிப்பதை பொதுமக்கள் வெளிப்படுத்தும் வகையில் மக்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். புதுவை மாநில வளா்ச்சியே முக்கியமானது என்றாா். பிரசாரத்தில் பாஜக வேட்பாளா் அமைச்சா் ஆ.நமச்சிவாயம், வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் ஆகியோா் உடன் சென்றனா். ஆலோசனைக் கூட்டம்: புதுச்சேரி கதிா்காமம் தொகுதியில் மக்களவைத் தோ்தல் குறித்த என்.ஆா்.காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் முதல்வா் என்.ரங்கசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் பாஜக வேட்பாளா் அமைச்சா் ஆ.நமச்சிவாயம், கதிா்காமம் தொகுதி எம்எல்ஏ கேஎஸ்பி.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com