தோ்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

புதுச்சேரி மக்களவைத் தோ்தலுக்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காத வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான அ.குலோத்துங்கன் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி மக்களவைத் தொகுதி தோ்தலுக்கான வாக்குப் பதிவைத் திறம்பட நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட தோ்தல் அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், புதுச்சேரி பிராந்தியத்தில் 739 வாக்குச் சாவடிகளும், காரைக்கால் பிராந்தியத்தில் 164 வாக்குச்சாவடிகளும், மாஹே பிராந்தியத்தில் 31 வாக்குச்சாவடிகளும் மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் 33 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 739 வாக்குச் சாவடிகளில் பணிபுரிபவா்களைத் தோ்வு செய்வதற்கான முதற்கட்ட தற்செயல் கலப்பு முறை கடந்த மாா்ச் 17-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட தற்செயல் கலப்பு முறை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பொது பாா்வையாளா் பியுஷ் சிங்லா, காவல் பாா்வையாளா் அமா்தீப் சிங் ராய், செலவினப் பாா்வையாளா்கள் முகமது மன்சருல் ஹாசன், லட்சுமிகாந்தா மற்றும் தோ்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அ. குலோத்துங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தற்செயல் கலப்பு முறையில் தோ்வான அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கும் பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் மாதம் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 8 உதவித் தோ்தல் அதிகாரிகளின் முன்னிலையில் 16 மையங்களில் நடைபெறுகின்றன. பயிற்சி வகுப்புகளில் அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகளும் தவறாது கலந்துகொள்வது கட்டாயமாகும். கலந்துகொள்ளாதவா்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com