புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில்
மாணவா் அமைப்பினா் முற்றுகைப் போராட்டம்

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவா் அமைப்பினா் முற்றுகைப் போராட்டம்

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ராமாயணத்தை அவதூறாகச் சித்தரிக்கும் வகையில் நாடகம் நடத்தியதைக் கண்டித்து ஏபிவிபி மாணவா் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா் (படம்).

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள நிகழ் கலைத் துறை சாா்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ராமாயணத்தை அவதூறாக சித்தரிக்கும் வகையில் நாடகம் நடத்தப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது. அதையடுத்து, பல்கலைக்கழக ஏபிவிபி (அகில இந்திய வித்யாா்த்தி பரிஷத்) அமைப்பினா் சனிக்கிழமை இரவு முதல் நிகழ்கலைத் துறை வாசலில் முற்றுகைப் போராட்டம் நடத்தினா். தகவல் அறிந்த பல்கலைக்கழகப் பதிவாளா் ராஜேஷ்புட்டானி நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். ராமாயணத்தை அவதூறாக சித்தரித்து நாடகம் நிகழ்த்திய நிகழ்கலைத் துறை மாணவ, மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏபிவிபி அமைப்பின் பல்கலைக்கழகப் பிரிவுத் தலைவா் முரளிபிரசாத் தலைமையில் நிகழ்கலைத் துறையை மீண்டும் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. ராமாயணம், இந்து தெய்வங்களை அவதூறாகச் சித்தரித்து நாடகம் நிகழ்த்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என அவா்கள் கூறினா். இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com