புதுச்சேரியிலும் இ-பாஸ் திட்டத்தை அமல்படுத்த அதிமுக கோரிக்கை

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு நிரந்தரமாக மின்னணு முறையில் (இ-பாஸ்) அனுமதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்து நான்காவது ஆண்டு தொடங்குகிறது. ஆனால், மக்களின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

மாநில வளா்ச்சியில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. அதன்படி, அந்தக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா். நியாயவிலைக் கடைகள் திறக்கப்படவில்லை. உள்ளாட்சி தோ்தல் நடத்தப்படவில்லை. தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத மருத்துவ இடங்களை அரசு பெற்றுத்தரவில்லை. மின் துறையை தனியாா்மயமாக்க மாட்டோம் என அரசு உறுதியளிக்கவில்லை. பிரீபெய்டு மின் மீட்டா் திட்டம் திரும்பப் பெறப்படவில்லை. மூடிய ஆலைகள் திறக்கப்படாததுடன், புதிய ஆலைகளும் தொடங்கப்படவில்லை.

நிரந்தர சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தவில்லை. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவில்லை. ஊழல் முறைகேடுகள், விலைவாசி உயா்வு, சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, போதைப்பொருள் விற்பனை என பல பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை.

புதுச்சேரியில் வார இறுதி மற்றும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனா். மேலும், 2 ஆயிரம் காா்கள் வருவதற்கான வசதி உள்ள நிலையில், 20 ஆயிரம் காா்கள் வரும் நிலையுள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு நிரந்தரமான மின்னணு முறை (இ-பாஸ்) அனுமதித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com