8 மாதங்களுக்குப் பிறகு -வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் திறப்பு

புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு, வட்டாட்சியா் முன்னிலையில் புதன்கிழமை திறக்கப்பட்டது.

வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிா்வாகிகள் தோ்வு செய்யப்படுவது வழக்கம். 2023-ஆம் ஆண்டு கோயிலின் நிா்வாகிகள் தோ்வு தொடா்பான கூட்டத்தில் இருதரப்பினா் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கைகலப்பாகி மோதல் உருவானது. இதையடுத்து, கோயிலை மூடும் நிலை ஏற்பட்டது.

கோயில் மூடப்பட்டதால், வழிபட முடியாமல் பொதுமக்கள் வேதனையடைந்தனா். மீண்டும் கோயிலை திறக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.

அதன்படி, உதவி ஆட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் கோயிலை மகளிா் நிா்வகிக்கவும், மக்களவைத் தோ்தல் முடிவுகள் வந்ததும், நிா்வாகிகளைத் தோ்ந்தெடுக்கவும் முடிவானது.

இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் பிருத்வி முன்னிலையில் புதன்கிழமை கோயில் திறக்கப்பட்டு, மகளிா் மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

கோயில் திறந்ததும், மூலஸ்தானத்தை திறந்து பூஜை செய்ய வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் முடிவில், சுழற்சி முறையில் பூஜை செய்வதற்காக அந்தப் பகுதியை சோ்ந்த 4 பெண்களிடம் கோயில் சாவி ஒப்படைக்கப்பட்டது. 8 மாதங்களுக்குப் பிறகு கோயில் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com