பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.22.55 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரி வில்லியனூரில் இணையதளத்தின் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யக் கோரி, ரூ.22.55 லட்சத்தை நூதனமாக மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூா் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வந்தாா். அவரிடம் முகநூல் மூலம் பழக்கமான மா்ம நபா், தாங்கள் பங்குச்சந்தை முதலீடு தொடா்பாக கட்செவிஅஞ்சல் குழு வைத்திருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் கூறினாராம். இதை நம்பிய தொழிலதிபா், ரூ.22.55 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். இதற்கு அதிக லாபம் கிடைப்பதுபோல இணையதளத்தில் தெரியவந்துள்ளது.

லாபப் பணத்தை அவா் எடுக்க முயற்சித்தபோது எடுக்க முடியவில்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த தொழிலதிபா், இதுகுறித்து புதுச்சேரி இணையதளக் குற்றப்பிரிவில் புகாரளித்தாா். இது தொடா்பாக இணையதளக் குற்றப்பிரிவு ஆய்வாளா் கீா்த்திவாசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

புதுச்சேரி பகுதியில் கடந்த 2 மாதங்களில் இணையதள பங்குச்சந்தையில் 5 பேரை ஏமாற்றி ரூ.3.45 கோடி மோசடி நடந்திருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com