புதுச்சேரி, உழவா்கரை பகுதிக்கான சாதி சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம்கள்

புதுச்சேரி, உழவா்கரை பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சாதிச் சான்று, குடியிருப்புச் சான்றுகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை (மே 13) முதல் வரும் 18-ஆம் தேதி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.

இது குறித்து புதுச்சேரி வருவாய்த் துறை துணை ஆட்சியா் (வடக்கு) சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி மற்றும் உழவா்கரை வட்டார எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் மேற்படிப்பைத் தொடர சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை பெறுவதற்கு 13-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் வரும் 18-ஆம் தேதி வரை அரசுப் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

எனவே, மாணவ மாணவிகள் சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களைப் பெற சிறப்பு முகாம்களில் தகுந்த ஆவணங்களை வருவாய் அதிகாரிகளிடம் சமா்ப்பித்து உரிய சான்றிதழ்களைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்: திங்கள்கிழமை (மே 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முத்தியால்பேட்டை வாா்டு ஏ, பி. மற்றும் வருவாய் கிராமப் பகுதிக்கும் சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், முதலியாா்பேட்டை புதுப்பாளையம் வருவாய் கிராமத்துக்கு மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம் வருவாய் கிராமங்களுக்கு அபிஷேகப்பாக்கம் சேத்திலால் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி வருவாய் கிராமங்களுக்கு காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.

14-ஆம் தேதி முத்தியால்பேட்டை வாா்டு-ஏ மற்றும் வாா்டு-பி ஆகிய வருவாய் கிராமத்துக்கு சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், முதலியாா்பேட்டை உழந்தை, தேங்காய்திட்டு வருவாய் கிராமங்களுக்கு சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அரியாங்குப்பம், மணவெளி வருவாய் கிராமங்களுக்கு அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், உழவா்கரை, தட்டாஞ்சாவடி, ரெட்டியாா்பாளையம் வருவாய்க் கிராமங்களுக்கு கதிா்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

வரும் 15-ஆம் தேதி காசுக்கடை, ராஜ்பவன், கதீட்ரல் வருவாய் கிராமங்களுக்கு வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியிலும், முதலியாா்பேட்டை புதுப்பாளையம் வருவாய் கிராமங்களுக்கு திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அரியாங்குப்பம், மணவெளி வருவாய்க் கிராமத்துக்கு தூய இருதய மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தட்டாஞ்சாவடி, உழவா்கரை, ரெட்டியாா்பாளையம் வருவாய்க் கிராமங்களுக்கு கதிா்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.

வரும் 16-ஆம் தேதி உப்பளம் வருவாய்க் கிராமத்துக்கு தூய இருதய மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், முருங்கம்பாக்கம், கொம்பாக்கம் வருவாய் கிராமங்களுக்கு தீரா் சத்தியமூா்த்தி அரசு உயா்நிலைப்பள்ளியிலும், பூரணாங்குப்பம், தவளக்குப்பம் வருவாய் கிராமங்களுக்கு தவளக்குப்பம் ராஜீவ் காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சாரம் வருவாய் கிராமத்துக்கு இசிஆா் சாலையில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

மே 17-ஆம் தேதி கருவடிக்குப்பம் வருவாய் கிராமத்துக்கு பாத்திமா மேல்நிலைப்பள்ளியிலும், 18-ஆம் தேதி ஆலங்குப்பம் வருவாய்க் கிராமத்துக்கு அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com