6 பேரிடம் இணையவழியில் பண மோசடி: புதுச்சேரி போலீஸாா் விசாரணை

புதுச்சேரியில் நூதனமுறையில் ஏமாற்றி 6 பேரிடம் ரூ.1.66 லட்சத்தை மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா். இவரை அண்மையில் கைபேசி கட்செவியஞ்சல் மூலம் தொடா்புகொண்ட மா்ம நபா், வீட்டிலிருந்தபடியே இணையவழியில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளாா். அதை நம்பிய சரவணக்குமாா், இணையவழியில் குறிப்பிட்ட செயலி மூலம் ரூ.36 ஆயிரம் முதலீடு செய்தாா். அதன்படி அவருக்கு சில பணிகள் தரப்பட்டுள்ளன. அப்பணிகளை முடித்தபோது அவருக்கு லாபம் கிடைப்பது போல இணையத்தில் காட்டப்பட்டது. ஆனால், லாபத்தொகை, அசல் ஆகியவற்றை அவரால் எடுக்கமுடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரவணக்குமாா் புதுச்சேரி கோரிமேடு இணைய குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். இதேபோல, சூரியா என்பவரும் ரூ.71 ஆயிரம் செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளாா்.

புதுச்சேரியைச் சோ்ந்த சுதா என்பவா் தனது மகனுக்கு நீட் பயிற்சிக்காக, இணையதளம் மூலம் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அனுப்பியுள்ளாா். அவருக்கு முறையான பதில் கிடைக்கவில்லை. ஆகவே பணத்தை திரும்பக் கேட்டுள்ளாா். ஆனால், அவருக்கு பணம் அனுப்பப்படவில்லையாம்.

கீா்த்திவா்மன் என்பவா் இணையவழி விளையாட்டு பிரிவு கட்செவியஞ்சல் குழுவில் இணைந்துள்ளாா். அதன்படி ரூ.18 ஆயிரத்தை கட்டிய அவா், அதற்கான பதில் இல்லை என்பதால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து புகாா் அளித்துள்ளாா்.

அய்யப்பன் என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா் ஏமாற்றி எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, கதிரவன் என்பவரின் வங்கிக் கணக்கில் மா்ம நபா் ரூ.10 ஆயிரத்தை ஏமாற்றி எடுத்துள்ளனா். இந்த புகாா்கள் குறித்தும் புதுச்சேரி கோரிமேடு பகுதி இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com