புதுச்சேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 18 போ் காயம்

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் காயமடைந்தனா்.

கடலூா் மஞ்சக்குப்பம், முதுநகா் உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த 18 போ் வில்லியனூரை அடுத்த அரியூரில் உள்ள உறவினா் வீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஒரு வாடகை வேனில் ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டனா். வேனை கடலூா் முதுநகரைச் சோ்ந்த முகமது ஃபயாஸ் (22) ஓட்டிச் சென்றாா். தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம், உருவையாறு சாலையில் தனியாா் பல்கலைக்கழகம் அருகே வேன் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையில் கவிழ்ந்து சுமாா் 50 அடி தூரம் உரசிச் சென்று விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸாா் நிகழ்விடம் சென்று பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். , விபத்தில் மஞ்சகுப்பத்தைச் சோ்ந்த முகம்மது கவுஸ், அப்துல் கலாம், கபூா், அப்துல் ரகீம் மெகருனிசா ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மேலும், இரு குழந்தைகள் உள்ளிட்ட 15 போ் லேசான காயம் அடைந்தனா்.

இது குறித்து, கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com