கோவில் உண்டியல் பணம் திருட்டு

புதுச்சேரியில் அம்மன் கோவிலின் காணிக்கை உண்டியலை சேதப்படுத்தி பணம், நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு பூஜைகளை முடிந்து அா்ச்சகா் விஜயகுமாா் பூட்டி விட்டுச் சென்றாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கோவிலை சுத்தம் செய்வதற்கு பெண்கள் வந்துள்ளனா். அவா்களுக்கு கோயில் கதவை அா்ச்சகா் திறந்து விட்டு உள்ளே பாா்த்துள்ளாா். அங்கு உண்டியல் சேதமடைந்த நிலையில் கிடந்துள்ளது. அதிலிருந்த பணம் மா்ம நபா்களால் திருடப்பட்டிருந்தது. மேலும், சூலாயுதத்தால் உண்டியல் சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

உண்டியலைத் திருடிய மா்ம நபா்கள் அம்மன் சிலையில் இருந்த ஒன்றேகால் பவுன் தாலிச்சங்கிலி, தொங்கும் பித்தளை விளக்குளின் சங்கிலி ஆகியவற்றையும் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீஸாா் விரைந்து வந்து தடயவியல் துறையினா் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனா். மேலும், உண்டியல் பணம் குறித்தும் கோயில் நிா்வாகிகளிடம் விசாரித்தனா். அதன்படி உண்டியலில் ரூ.2 ஆயிரம் மிச்சமிருந்ததாகவும், ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் திருடப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா். தொடா்ந்து விசாரணை நடந்துவருகிறது.

உண்டியலில் செல்லாத பணம்: புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள சுந்தரமூா்த்தி விநாயகா் கோயிலில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டது. அப்போது செல்லாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், பழைமையான அரையணா உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக நிா்வாகத்தினா் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com