புதுச்சேரி கோயில் சொத்துகள் 3 மாதங்களில் மீட்கப்படும்: அறநிலையத் துறை செயலா்

புதுச்சேரி, மே 15:

புதுச்சேரியில் ஸ்ரீவேதபுரீஸ்வரா் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் நிலங்கள் 3 மாதங்களில் மீட்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை செயலா் நெடுஞ்செழியன் கூறினாா்.

புதுச்சேரியில் கோயில் சொத்துகள் தனியாரால் ஆக்கிரமிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன. காமாட்சியம்மன் கோயில் சொத்துகள் நீதிமன்றத்தால் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வேதபுரீஸ்வரா், வரதராஜப் பெருமாள் கோயிலின் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு உள்ளிட்டோா் இந்து சமய அறநிலையத் துறைக்கு புகாா் மனு அளித்தனா்.

புகாா்களுக்கு பதிலளித்து துறை செயலா் நெடுஞ்செழியன் கூறியிருப்பதாவது:

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவற்றை மீட்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். கோயில் சொத்துகளை மீட்டு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்குள் கோயில் நிலம் மீட்கப்பட்டு, வருவாய் ஈட்டப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com