பணியின்போது இறந்த ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை: முதல்வா் என்.ரங்கசாமி
புதுவை மாநிலத்தில் பணியின்போது உயிரிழந்த ஊழியா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையிலான பணிகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி உள்ளாட்சித் துறை, உழவா்கரை நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கான சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஜவஹா்நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா், தூய்மைப்பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கி பேசியதாவது: நகரில் சுத்தம், சுகாதாரம் மிகமுக்கியமானவையாகும். நோய் பாதிப்பை வரும் முன் காப்பதற்கு சுகாதாரமாக வாழ்வது அவசியம்.
கரோனா பாதிப்பு காலத்தில் தூய்மைப் பணியாளா்களின் பங்களிப்பை மறக்கமுடியாது. கரோனாவுக்குப் பிறகே சுகாதாரமாக வாழ்வதில் அக்கறை செலுத்துகிறோம். சத்தான உணவுகளை உண்கிறோம்.
தூய்மைப்பணியில் புதுவை உள்ளாட்சித் துறையும், நகராட்சியும் இணைந்து செயல்பட்டுவருவது பாராட்டுக்குரியது. தற்போது டெங்கு பாதிப்பு இருந்தாலும், கடந்த ஆண்டைவிட, குறைவாகவே உள்ளது. தற்போது டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.
சுகாதாரத் துறையில் தூய்மைப்பணியில் ஈடுபட்டுவருவோா் ஆயுள் குறைந்தே காணப்படுகிறது. எனவே அவா்களது வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணிகளை வழங்கி வருகிறோம்.
புதுவையில் சுகாதாரத் துறையில் 126 பேருக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்குவதற்கான கோப்புகள் தயாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, உள்ளாட்சித் துறையிலும் கருணை அடிப்படையிலான பணிகள் வழங்கப்படவுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில் பெண் தூய்மைப்பணியாளா்களுக்கான சீருடைகளை முதல்வா் வழங்கினாா். இதில் உழவா்கரை எம்.சிவசங்கரன் எம்எல்ஏ, உள்ளாட்சித் துறை இயக்குநா் சக்திவேல், உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ், மாநில சுகாதாரத் துறை இயக்குநா் (பொ) செவ்வேள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.