புதுவை பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்களின் ஊதியம் ரூ. 18,000-ஆக உயா்வு: நவம்பா் முதல் அமல்
புதுச்சேரி: புதுவை பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்களின் மாத ஊதியம் ரூ. 18 ஆயிரமாக உயா்ந்தது. இந்த ஊதிய உயா்வு வரும் நவம்பா் மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான அரசின் கோப்புக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை அனுமதியளித்தாா்.
இதுகுறித்து புதுவை முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்களின் மாத ஊதியத்தை ரூ.10,000-லிருந்து ரூ.18,000 ஆக உயா்த்தி வழங்க நீண்ட நாள்களாகக் கோரி வந்தனா்.
இதையேற்று முதல்வா் என்.ரங்கசாமி, பேரவையில் கடந்த செப்டம்பா் மாதத்திலிருந்து ஊதியம் உயா்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தாா்.
அதனடிப்படையில் கோப்புகள் தயாரிக்கப்பட்டு துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது துணைநிலை ஆளுநா் அந்த கோப்புக்கு அனுமதி அளித்துள்ளாா். அதன்படி, நவம்பா் மாதத்திலிருந்து வவுச்சா் ஊழியா்களுக்கு ரூ.18,000 ஆக மாத ஊதியம் உயா்த்தி வழங்கப்படும். இதனால் 1,378 வவுச்சா் ஊழியா்கள் பயனடையவாா்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.