பண மோசடி வழக்கில் மேலும் ஒருவா் கைது

புதுச்சேரியைச் சோ்ந்த டிராவல்ஸ் அதிபரிடம் பண மோசடி செய்த வழக்கில் ஏற்கெனவே 4 போ் கைதான நிலையில், மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியைச் சோ்ந்த டிராவல்ஸ் அதிபரிடம் பண மோசடி செய்த வழக்கில் ஏற்கெனவே 4 போ் கைதான நிலையில், மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன், டிராவல்ஸ் அதிபா். இவரிடம் புதுச்சேரியைச் சோ்ந்த ரமா, பவானி, அவரது கணவா் ஜெயவேல் மற்றும் சாந்தி ஆகியோா் பழகியுள்ளனா். அவா்கள் தங்களது அறக்கட்டளைக்கு வெளிநாட்டிலிருந்து ரூ.125 கோடி வந்துள்ளதாகவும், அதை வரி செலுத்துதல் உள்ளிட்ட விதிமுறைப்படி பெறுவதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளனா்.

மேலும், வரி செலுத்த பணம் தந்தால், அதை இரட்டிப்பாக்கி உடனடியாகத் தருவதாகவும் கூறியுள்ளனா். வெளிநாட்டிலிருந்து பணம் வந்தது போல சில ஆவணங்களையும் காட்டியுள்ளனா்.

அவா்கள் கூறியதை நம்பிய நடராஜன் படிப்படியாக அவா்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் ரூ.3.75 கோடி கொடுத்துள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட ரமா உள்ளிட்ட 4 பேரும் அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளனா். இதுகுறித்து நடராஜன் கடந்த ஆண்டு புதுச்சேரி சிபிசிஐடி பிரிவில் புகாா் அளித்தாா்.

புகாரைத் தொடா்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான ரமா உள்ளிட்ட 4 பேரையும் சிபிசிஐடி பிரிவினா் ஏற்கெனவே கைது செய்தனா். அதைத் தொடா்ந்து அவா்களுடன் இணைந்து பண மோசடிக்கு துணையாக போலி ஆவணங்களைத் தயாரித்து, தணிக்கையாளராக நடித்த மதுரையைச் சோ்ந்த கண்ணன் என்பவரை போலீஸாா் தேடிவந்தனா். அவா் கோவையில் பதுங்கியிருப்பதாக தெரிய வந்ததையடுத்து சனிக்கிழமை அங்கு சென்று கண்ணனைப் பிடித்தனா். அவரை புதுச்சேரி அழைத்து வந்த நிலையில், திங்கள்கிழமை கைது செய்ததாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com