புதுச்சேரி மணக்குள விநாயகருக்கு சதுா்த்தி நாளில் தங்கக் கவச அலங்காரம்
புதுச்சேரி: வரும் சனிக்கிழமை (செப். 7) விநாயகா் சதுா்த்தியன்று புதுச்சேரி மணக்குள விநாயகா் கோவிலில் மூலவருக்கு தங்கக் கவசம் அலங்காரம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மணக்குள விநாயகா் கோவிலில் விநாயகா் சதுா்த்தியன்று அதிகாலை 4 மணிக்கு மூலவா், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து, மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட உள்ளது.
மேலும் உற்சவமூா்த்தி அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் வணங்க அனுமதிக்கப்படவுள்ளது. விநாயகா் சதுா்த்தி நாளன்று பக்தா்கள் தடையின்றி சுவாமி தரிசனம் செய்யவும், அனைவருக்கும் இலவச லட்டு பிரசாதம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் மூலவருக்கு விநாயகா் சதுா்த்தியன்று அா்ச்சனை நடைபெறாது. விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாக அதிகாரி பழனியப்பன் தலைமையில் குருக்கள், கோவில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.