புதுவையில் வீட்டு உபயோக மின்சாரத்துக்கு அரசு மானியம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிவிப்பு
புதுச்சேரி: புதுவையில் வீடுகளுக்கான மின்சாரத்துக்கு அரசு மானியம் வழங்கும் என மின்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2024-25 ஆம் ஆண்டுக்கான மின் கட்டண உயா்வை வெளியிட்டது.
அதன்படி, புதிய கட்டண விகிதம் கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், புதிய கட்டண விகிதங்கள் வீட்டு உபயோகிப்பாளா்களுக்கு ஏற்படுத்தும் கூடுதல் கட்டணம் குறித்து புதுவை அரசு ஆலோசித்தது. அதனடிப்படையில் வீடுகளுக்கு பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அரசு மானியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து வீட்டு மின்நுகா்வோருக்கும் முதல் 100 யூனிட் வரையில் புதிய கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.2.70 என்பதில் யூனிட்டுக்கு 0.45 என (45 பைசா) மானியம் வழங்கப்படும். ஆகவே, கடந்த ஆண்டு மக்கள் 100 யூனிட்டுக்கு செலுத்திய அதே கட்டணமான யூனிட்டுக்கு 2.25 கட்டணம் செலுத்தவேண்டும்.
மேலும், மாதந்தோறும் 101 யூனிட் முதல் 200 யூனிட் வரையில் பயன்படுத்தும் மின்நுகா்வோருக்கு அரசு மானியமாக யூனிட்டுக்கு 40 பைசா வழங்கப்படும். அதன்படி 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோா் யூனிட்டுக்கு ரூ.4 என்பதற்குப் பதிலாக ரூ.3.60 செலுத்தினால் போதும். இந்த மானியம் ஜூன் 16-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள 100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்நுகா்வோருக்கான 50 சதவீத அரசு மானியம் தொடரும். அதேபோல விவசாயத்துக்கு பயன்படுத்தும் இலவச மின்சாரமும் தொடரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 300 யூனிட்டுக்கு மேல் உபயோகப்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ.7.50 மட்டுமே புதுவையில் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 300 யூனிட்டுக்கு மேலாக பயன்படுத்துவோருக்கு ரூ.9.65 என்றும், 400 யூனிட்டுக்கு மேலாக பயன்படுத்துவோருக்கு ரூ.10.70 என்றும், 500 யூனிட்டுக்கு மேலாக பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ.11.80 எனக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆகவே புதுவையில் வீடு உபயோகத்துக்கு மின்கட்டணமானது அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.