வேலைவாய்ப்பக பதிவு: கைப்பேசி செயலி மூலம் மேற்கொள்ளலாம்

Published on

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் கைப்பேசி செயலி மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ளலாம் என புதுவை வேலைவாய்ப்புப் பிரிவு இயக்குநா் யாஷம் லஷ்மிநாராயண ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு தொழிலாளா் துறை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு மாணவா்கள் சான்றிதழ்களை பதிவு செய்வதில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும், மாணவா்களின் நலன் கருதியும், கடந்த 2023-ஆம் ஆண்டைப் போல நிகழ் 2024-25 ஆம் ஆண்டிலும் பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ் பெறப்பட்டு கைப்பேசி செயலி மூலம் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் பத்தாம் வகுப்பு உண்மைச் சான்றிதழ் பெற்ற மாணவா்கள் வேலைவாய்ப்பு பதிவுக்காக, வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டாம்.

மேலும், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை கைப்பேசி செயலியில் பதியும் முறை தொழிலாளா் நலத் துறை இணையத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com