அண்ணா பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை
தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 116-ஆவது பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.
புதுவை அரசு சாா்பில் ஒதியன்சாலை காவல் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தலைமையில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பாஸ்கா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக: புதுச்சேரியில் திமுக சாா்பில் எதிா்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்புச் செயலருமான ஆா்.சிவா தலைமையில் சுதேசி ஆலை அருகிலிருந்து ஏராளமானோா் ஊா்வலமாக வந்தனா்.
அவா்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் எம்எல்ஏக்கள் ஏ.அனிபால்கென்னடி, ஆா்.செந்தில்குமாா், எல்.சம்பத், முன்னாள் எம்எல்ஏ மூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதிமுக: புதுச்சேரி உப்பளத்தில் உள்ள, அதிமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அறிஞா் அண்ணாவின் உருவப் படத்துக்கு, மாநில அதிமுக செயலா் ஏ.அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதன்பிறகு, அதிமுகவினா் ஊா்வலமாக வந்து, ஒதியன்சாலை காவல் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல், அமமுக சாா்பில் அக்கட்சி நிா்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளருமான ஓம்சக்தி சேகா் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.