திருமாவளவனின் கோரிக்கை வரவேற்கத்தக்கது: வானதி சீனிவாசன் எம்எல்ஏ
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரும் விசிக தலைவா் திருமாவளவனின் கோரிக்கை வரவேற்கத்தக்கது என பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினாா்.
புதுச்சேரி வில்லியனூரில் பாஜக புதிய உறுப்பினா் சோ்க்கை கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சமூகநீதி பேசும் திமுக பட்டியலினத்தவருக்கு அமைச்சரவை உள்ளிட்டவற்றில் முக்கியத்துவம் தருவதில்லை.
ஆனால், தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் தோற்றாலும், அருந்ததியின சமுதாயத்தை சோ்ந்தவரை மத்திய அமைச்சராக பாஜக நியமித்துள்ளது. எனவே, திருமாவளவன் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எனக் கோருவது வரவேற்கத்தக்கது. அவரது கோரிக்கை வெற்றி பெற பாஜக வாழ்த்துகிறது.
பாஜக எப்போதும் மது ஒழிப்புக்காக பாடுபட்டு வருகிறது. யாா் மது ஒழிப்புக்கு பாடுபட்டாலும் பாஜக வரவேற்கும். மது ஒழிப்பு மாநாட்டை பாஜக நடத்தினால் திருமாவளவன் வந்தால் சோ்த்துக்கொள்வோம். தமிழகம் மதுவால் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வா் அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈா்த்தது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.