பதிவெண் இல்லாத வாகனங்கள்: அதிமுக புகாா்

Published on

புதுச்சேரியில் போக்குவரத்துப் பதிவு எண்கள் இல்லாமலே சுமாா் 4,000 பேட்டரி இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுவதாக அதிமுக சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

புதுவை அதிமுக செயலா் ஆ.அன்பழகன் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து அளித்த மனுவின் விவரம்: கடந்த சில நாள்களாக, புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து 4,000-க்கும் மேற்பட்ட போக்குவரத்துப் பதிவு எண்கள் இல்லாத பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், சுற்றுலாப் பயணிகள் கூடும் பேருந்து நிலையம், திரையரங்குகள், ரயில் நிலையம், சுற்றுலாத் தளங்கள் ஆகியப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

அவை இணையதளம் மூலமாகவே முன்பதிவு செய்து வாடகைக்கு விடப்படுகின்றன. இதனால், ஆட்டோ தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

எனவே, பேட்டரி இருசக்கர வாகனத்தை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும். இதுதொடா்பாக, முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com