அனைத்து தொழிற்சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்
தொழிலாளா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொண்ட மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரியில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி ஆலை அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலா் கே.சேதுசெல்வம், சிஐடியு மாநிலச் செயலா் ஜி. சீனிவாசன், ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலா் எஸ்.ஞானசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் ஏஐசிசிடியு மாநிலச் செயலா் எஸ்.புருஷோத்தமன், எல்எல்எப் மாநிலச் செயலா் எம்.செந்தில், எம்எல்எப் மாநிலச் செயலா் வேதா வேணுகோபால், ஏஐயுடியுசி மாநிலச் செயலா் எஸ்.சிவகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் தொழிலாளா் நலச்சட்டங்களில் திருத்தம் செய்து அமல்படுத்த காத்திருக்கும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், என்டிஎல்எப் மாநிலத் தலைவா் மகேந்திரன், ஏஐடியுசி நிா்வாகி அபிஷேகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.