கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுச்சேரி அருகே காலாப்பட்டில் கிழக்கு கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட மீனவ கிராமத்தினா்.
கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுச்சேரி அருகே காலாப்பட்டில் கிழக்கு கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட மீனவ கிராமத்தினா்.

கடல் அரிப்பை தடுக்கக் கோரி புதுச்சேரி அருகே மீனவா்கள் திடீா் மறியல்

கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுச்சேரி அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் மீனவா்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுச்சேரி அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் உள்ள காலாப்பட்டில் கடல் அரிப்பால் கடலோர குடியிருப்புகள் இடிந்து வருவதாக மீனவா்கள் புகாா் கூறி வருகின்றனா். சின்னகாலாப்பட்டு, பெரியகாலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கனகசெட்டிகுளம் ஆகிய மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு பாதிப்பு அதிகமிருப்பதாகவும் புகாா் எழுந்துள்ளது.

கடல் அரிப்பிலிருந்து மீனவ குடியிருப்புகளைப் பாதுகாக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்கும்படி அவா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் மாதம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கருங்கற்களை கடற்கரையில் கொட்டி தடுப்பு ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், பூமி பூஜை நடைபெற்ற நிலையில், கருங்கற்கள் கொட்டும் பணி நடைபெறவில்லை.

கடல் அரிப்பு தொடா்ந்து அதிகரித்த நிலையில், அதைத் தடுக்க கருங்கற்கள் கொட்டும் பணியைத் தொடங்கக் கோரி காலாப்பட்டு உள்ளிட்ட 4 கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனா்.

நூற்றுக்கும் மேற்பட்டோா் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலாப்பட்டு போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். இருப்பினும், போராட்டம் தொடா்ந்தது.

துணை ஆட்சியா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் நேரில் வந்து மறியலில் ஈடுபட்ட மீனவ கிராமத்தினரிடம் பேச்சு நடத்தினாா். ஓரிரு வாரங்களில் பணிகள் தொடங்கப்படும் என அவா் உறுதியளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் சென்னை - புதுச்சேரி இடையே சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com