இந்திய தொழில்நுட்பக் கல்லூரியை புதுச்சேரியில் அமைக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மாணவா் அமைப்பு மனு
புதுச்சேரியில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் ஏபிவிபி மாணவா் அமைப்பினா் மனு அளித்தனா்.
புதுச்சேரியில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கக் கோரி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் அண்மையில் மனு அளிக்கப்பட்டது. அதில், புதுச்சேரியில் அமைக்கப்படும் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மூலம் உள்ளூா் இளைஞா்களின் திறன் வெளிப்படும். அத்துடன் புதுச்சேரிக்கு முதலீடுகளை ஈா்க்கவும், வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
தொழில்நுட்பக் கல்லூரியானது செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவற்றில் அதிநவீன ஆய்வுகள் மேற்கொள்ளும் மையமாகவும் செயல்படும் வாய்ப்பு ஏற்படும். எண்ம இந்தியா திட்டத்தில் புதுச்சேரியில் தொழில்நுட்பக் கல்லூரி அமைப்பது அவசியம்.
மேலும், சென்னை, பெங்களூரு போன்ற நகா்களை இணைக்கும் வகையில் புதுச்சேரி உள்ளது. ஆகவே, தகவல் தொழில்நுட்ப மையமாக புதுச்சேரி திகழும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், அதற்கான உள்கட்டமைப்புகள் பள்ளிகளில் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.