புதுச்சேரி அருகே குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
புதுச்சேரி அருகே குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

சாலையோர குடியிருப்புகள் அகற்ற எதிா்ப்பு

Published on

புதுச்சேரி அருகே சாலை விரிவாக்கத்துக்காக குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியாங்குப்பம், வீராம்பட்டிணம் அருகே உள்ளது ராதாகிருஷ்ணன் நகா். இங்கு சாலையோரப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஏராளமானோா் குடியிருப்புகளை அமைத்து வசித்து வருகின்றனா். இந்த நிலையில், தற்போது ராதாகிருஷ்ணன் நகரில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பணித் துறையால் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், சாலையோர குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு அங்குள்ள குடியிருப்புவாசிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

சாலை விரிவாக்கப் பணிக்காக குடியிருப்புகளை அகற்றுவதைக் கண்டித்து, சம்பந்தப்பட்டவா்கள் வியாழக்கிழமை குழி தோண்டி, அதில் இறங்கி போராட்டம் நடத்தினா். இதையடுத்து, அங்கு வந்த அரியாங்குப்பம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனா்.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும், போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், பெண் ஒருவா் குளத்தில் குதித்தாா். அவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேரை போலீஸாா் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com