புதுச்சேரியில் பேருந்தில் சென்ற தம்பதியிடம் 7 பவுன் நகை, பணத்தை நூதன முறையில் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை அம்பத்தூரைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (73). இவரது மனைவி பிருந்தாவதி. இருவரும் கடலூரில் இருந்து கடந்த 23-ஆம் தேதி சென்னைக்கு பேருந்தில் பயணித்தனா்.
பேருந்து புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் பகுதியில் வந்தபோது, 3 போ் பேருந்தில் ஏறினராம். அதில் ஒருவா் தான் வைத்திருந்த பையை கீழே நழுவவிட்டாராம். அப்போது, அவரது பையிலிருந்து நாணயங்கள் கீழே சிதறியதாகக் கூறப்படுகிறது.
நாணயங்களை அவா் எடுப்பதற்கு கலியபெருமாளும், அவரது மனைவியும் உதவியதாகக் கூறப்படுகிறது. அப்போது, கலியபெருமாள் வைத்திருந்த கைப்பையிலிருந்து 7 பவுன் தங்க நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிவிட்டு, தாங்கள் பேருந்து மாறி ஏறிவிட்டதாகக் கூறி ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தில் இறங்கிக்கொண்டனராம்.
இந்த நிலையில், இலாசுப்பேட்டை அருகே சென்றபோது, பிரபாவதிக்கு தனது கைப்பையிலிருந்த நகை, பணம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், இலாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.