மாணவா்கள் இரண்டாவது நாளாக போராட்டம்
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியாா் பல்கலைக்கூட மாணவா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை அரசின் கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் பாரதியாா் பல்கலைக்கூடம் அரியாங்குப்பத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் இசை, நடனம், நுண்கலை என 3 பிரிவில் பட்டயப் படிப்பு உள்ளது. இதில் நுண்கலைத் துறை பயிலும் மாணவ, மாணவிகள் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா்.
தொழில்நுட்ப கல்வியான நுண்கலைத் துறையானது தற்போது கலை மற்றும் கைவினைப் படிப்பாக உள்ளது. ஆனால், அப்படிப்பை கலை மற்றும் அறிவியல் படிப்பாக மாற்ற கலை பண்பாட்டுத் துறை செயலா் புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பினாா்.
அதை, திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பாரதியாா் பல்கலைக் கூட மாணவா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் பல்கலைக்கூட ஆசிரியா்கள், நிா்வாகத் தரப்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.