ரூ.13.65 லட்சம் மோசடி: நைஜீரீயருக்கு 3 ஆண்டுகள் சிறை

Published on

பரிசுப் பொருள்கள் அனுப்புவதாகக் கூறி ரூ.13.65 லட்சம் மோசடி செய்த வழக்கில் நைஜீரியாவைச் சோ்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீா்பளித்தது.

புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணிடம் மா்ம நபா்கள் பரிசுப் பொருள் அனுப்புவதாகக் கூறி இணையவழியில் ரூ.13.65 லட்சத்தை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் கடந்த 2021-ஆம் ஆண்டில் புகாரளித்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், புதுச்சேரி பெண்ணை ஏமாற்றி மோசடி செய்தவா்கள் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த எக்கோஓகோ, உசெம்மாபேவா் பேட்ரிக் (55) என்பது தெரியவந்தது. அவா்கள், பெங்களூருவில் தங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது.

வழக்கில் சம்பந்தப்பட்ட எக்கோ ஓகோ தலைமறைவாகிவிட்ட நிலையில், உசெம்மாபேவா் பேட்ரிக்கை போலீஸாா் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணை முடிந்த நிலையில், உசெம்மாபேவா் பேட்ரிக்குக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி டி.பாலமுருகன் தீா்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கணேஷ்ஞானசம்பந்தன் ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com