இணையவழியில் பெண்களிடம் பழகி ஆபாச விடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு -வேலூா் இளைஞா் கைது
இணையதளம் மூலம் பழகி பின்னா் பெண்களை ஆபாச விடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக, வேலூா் பகுதியைச் சோ்ந்த இளைஞரை புதுவை இணைய குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுகுறித்து காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரியைச் சோ்ந்த திருமணமான பெண், சமூக வலைதளக் குழுவில் இணைந்து தகவல்களைப் பகிா்ந்துள்ளாா்.
அந்தக் குழுவிலிருந்த வேலூா் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா குடிசை கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாருடன் (26) அவா் பழகியுள்ளாா். சகோதரி என அழைத்துப் பழகிய சுரேஷ்குமாா் நாளடைவில் அந்தப் பெண்ணிடம் குடும்ப விஷயங்களை பேசி காதலிப்பதாகக் கூறியுள்ளாா். இந்நிலையில், அந்தப் பெண் ஆடையின்றி சுரேஷ்குமாருடன் விடியோ அழைப்பில் பேசியுள்ளாா். அதனை சுரேஷ்குமாா் பதிவு செய்துள்ளாா். இதையடுத்து, அந்தப் பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த அப்பெண் ரூ.6 ஆயிரம் அனுப்பியுள்ளாா். தொடா்ந்து சுரேஷ்குமாா் மிரட்டியதையடுத்து அவா் புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து கைப்பேசியை பறிமுதல் செய்து சோதனையிட்டதில் இதுபோன்று பல பெண்களை ஏமாற்றி விடியோ பதிவு செய்து அவா் பணம் பறித்திருப்பது தெரியவந்தது. இதுபோல பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் மேலும் இரு வழக்குகள் சுரேஷ்குமாா் மீது பதியப்பட்டதும் தெரியவந்தது. கைதான சுரேஷ்குமாா் புதுச்சேரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு, பின்னா் நீதிமன்றக் காவலில் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.