ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்ட விழிப்புணா்வு நடைபயணம்: புதுவை முதல்வா் தொடங்கிவைத்தாா்
புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்ட விழிப்புணா்வு நடைபயணம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் 6-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, புதுச்சேரி பாரதி பூங்கா அருகே விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது. இதை, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, மணக்குள விநாயகா், வெங்கடேஷ்வரா ஆகிய மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
நடைபயணமானது பாரதி பூங்கா உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, பின் புறப்பட்ட இடத்திலேயே நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவா்கள் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
புதுவையில் ஆயுஷ்மான் திட்டத்தில் 5.10 லட்சம் போ் பதிவு செய்த நிலையில், 95,520 போ் பயனடைந்திருப்பதாகவும், அவா்களுக்கு ரூ.76.54 கோடி வழங்கப்பட்டும், சிகிச்சைப் பெற்ற தனியாா் மருத்துவமனைகளுக்கு ரூ.42.12 கோடி செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஆயுஷ்மான் பாரத் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இயக்குநா் (பொ) செவ்வேல், துணை இயக்குநா் அனந்தலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.