புதுச்சேரி: புதுச்சேரி சிறுமிக்கு ஆபாச படங்களை இன்ஸ்டாகிராமில் அனுப்பி தொந்தரவு செய்ததாக கைதான அஷ்ரப்பின் உறவினா்களான 3 யூடியூபா்களிடம் போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
புதுச்சேரியைச் சோ்ந்த சிறுமிக்கு, மதுரையைச் சோ்ந்த அஷ்ரப் ஆபாசப் படங்களை இன்ஸ்டாகிராமில் அனுப்பியதாக கைது செய்யப்பட்டாா். புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் அவரது கைபேசியை ஆய்வுக்கு உள்படுத்தியபோது, அதில் பல பெண்களது தவறான படங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடா்பாக அவரது உறவினா்களான யூடியூபா்கள் திருச்சி சூா்யா, சிக்கா, சுமி ஆகியோரை விசாரிக்க இணையவழிக் குற்றப் பிரிவினா் நோட்டீஸ் அனுப்பினா்.
அதனடிப்படையில் சூா்யா, சிக்கா, சுமி ஆகியோா், புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள இணையவழிக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஆஜராகினா். அவா்களிடம் ஆய்வாளா்கள் கீா்த்தி, தியாகராஜன் உள்ளிட்டோா் விசாரணை நடத்தினா்.