ரூ.13 கோடி மோசடி: பொறியாளா் கைது
புதுச்சேரி: பல மாநிலங்களில் இணையவழியில் ஏராளமானோரிடம் ரூ.13 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக தெலங்கானா பொறியாளரை, புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரியைச் சோ்ந்தவா் கோபி. தனியாா் நிறுவன மேலாளா். இவரை, கடந்த ஜூலையில் இணையவழியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறினாராம்.
இதை நம்பிய அவா், பல தவணைகளில் ரூ.39. 25 லட்சம் வரை முதலீடு செய்தாராம். ஆனால், முதலீட்டையும், லாபத்தையும் அவரால் பெறமுடியவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
அதில் மா்ம நபா், 18 வங்கிக் கணக்குகளில் கோபியை பணம் செலுத்த வைத்திருப்பது தெரியவந்தது.
அதன்படி, புது தில்லி, தெலங்கானா ஆகியப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் பணம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவா் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சோ்ந்த ரோஹித் பாரிடே (26) என்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் தெலங்கானா விரைந்து ரோஹித் பாரிடேவை கைது செய்தனா். விசாரணையில் அவா் பொறியாளா் என்பதும், அவா் பல பேரிடம் ரூ.13 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.