புதுச்சேரியில் 10 நாள் தேசிய புத்தகக் கண்காட்சி! டிச.19-ல் தொடங்கி 28 வரை நடக்கிறது!
புதுச்சேரி எழுத்தாளா்கள் புத்தகச் சங்கத்தின் சாா்பில் 29-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி டிச. 19 முதல் 28-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இதில், புதுச்சேரி எழுத்தாளா்களின் 22 நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
இதுகுறித்து, புதுச்சேரி கூட்டுறவு புத்தக சங்கத் தலைவா் பேராசிரியா் பாஞ். ராமலிங்கம் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:
புதுச்சேரியில் தேசிய புத்தகக் கண்காட்சியை வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைக்கிறாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தலைமை வகிக்கிறாா். கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், மும்பை, தில்லி முதலான இடங்களிலிருந்து சுமாா் 100 புத்தக வெளியீட்டாளா்கள் மற்றும் விற்பனையாளா்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் கண்காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. இக் கண்காட்சியில் புதுச்சேரி எழுத்தாளா்களின் நூல்களுக்குத் தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இக் கண்காட்சியில் இடம் பெறும் நூல்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக் கண்காட்சி முற்பகல் 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். மாலையில் தினமும் பேச்சு, கவிதைப் போட்டிகள் நடைபெறும்.
இந்த ஆண்டு புத்தகம் வாங்கும் வாசகா்களின் பெயா்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் ரூ.1,000 மதிப்பிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும் என்றாா் பாஞ். ராமலிங்கம்.

